
கடந்து வந்த பாதை
கொஞ்சம் திரும்பி பார்க்கையில்
நடந்த தடங்கள்
நெஞ்சில் அலை மோதுகின்றதே
தலை பாகையோடு தந்தை
உச்சி வெயிலும் ஊச காத்தும்
நித்தம் தன் மேல் தவம் கொள்ள
காடு மேடு கழனி சுற்றி
வீடு வந்து விளக்கு வச்சி
வெற்றிலை பாக்கு செவந்த வாயோடு
வீதி சென்று வெளக்கு எண்ணெய் முதல்
வெளுக்க சவுக்காரம் வரை
வாங்கிவர இருப்பு பணம் போதாதே!
அழுக்கு துணியை
இளக்காரமாய் பார்த்து
வெளக்கு வச்சாச்சு
வெள்ளிகிழமை அதுவும் கடன் கிடையாது
இன்னிக்கி மட்டும் கடன் தாரேன்
இன்னோரு நாளு இப்பிடி வராதே
விடி காலையில்
வீதி சங்கு ஊதியாச்சு
அடுமனையில் ஆட்டாம்பால் காப்பிக்கு
அரை கைப்பிடி சர்க்கரை போதல
எதிர்த்த வீட்டில் கரைத்த பாகில்
கொஞ்சம் கடனாய் கேட்டு
காலை டிபன் முடிந்தது
கழனி வேலைக்கு
கணவணை அனுப்ப வேண்டுமே
உணவென்று ஊறுகாயுடன்
தயிர் கொண்டு தாளித்து கொட்டி
களிம்பேறிய தூக்கோடு
களத்துமேடு அனுப்பியாச்சு
வீட்டு வேலை முடிஞ்சிது
வீண் வம்பு பேசும் வேலையில்
காததூரம் போயி
கருக்கு வெட்டி வந்தா
குருக்கு பாயும்
தடுக்கு பொட்டியும் செய்யலாமே
மூணு ஜோடி நாலு ரூபா
மூத்த புள்ளைக்கி
ரெண்டு குயர்ல கட்டுரை நோட்டு
பசும்பால் வித்த காசு
பள்ளிக்கூட பீசுக்கு
சின்னவனுக்கு சினிமா கொட்டகையில்
கண்ணம்மா படம் பாக்கனுமாம்
பக்கத்துவிட்டுல
போன வருழமே
போய் வந்தாச்சாம்
தை மாசம் பொறக்கட்டும்
கைலாசம் கோவிலில்
தினம் ஒரு படம் பாக்கலாம்
கிட்டிப்புல் அடிச்சி
காருவாயும்
பொன்னாந்தட்டாம் புடிச்சி
நாலு ரூபாயும்
புத்த்கத்துகுள்ள வச்சுருக்கேன்
பொழுது சாஞ்சதும் போய் வருவோமா?
போடா போகாத்தவனே
தினம் ஒருத்தன்
திருட்டு கள்ள குடிச்சிட்டு
இருட்டுல நிக்கிறானுக
இன்னோரு நாளு போவோம்
கதிர் வீட்டு மாமா
கூட வாராராம்
கட்டு சோறு கூட வேண்டாம்
சுட்ட பனம்பழம் போதும்
சுருக்க வந்து சேருவேன்
கரண்டுக்கு எழுதி போட்டு இருக்கேன்
கருப்பு வெள்ளை டீவில
குழ்பூ படம் பாக்கலாம்
இருக்கிற காச எடு
எதிர்த்த வூட்ல
குமுதா பொண்ணுக்கு சடங்காம்
நானும் வச்சு குடுக்கனும்
நம்ம வூட்டுக்கு நாளக்கி
வந்து நிப்பா
சிலுக்கு மாமி
இந்த சிருக்கிக்கு என்ன செஞ்சேன்னு
பயலுக்கு நல்லா படிப்பு வருதாம்
பட்டணம் போயி படிக்கணுமாம்
கட்டணம் ஒன்னும் இல்லையாம்
கை செலவுக்கு மட்டும்
குறைவில்லாம வேணுமாம்
தளுக்கு நடை போட்டு
சுருக்க படிச்சி வந்து
கருவ காட்டுக்குள்ள
கரண்டு மரம் கொண்டு வந்து
இரண்டு நாள் இருந்து பாக்கல
உடனே கெளம்பி வரணும்
உனக்கு வாழ்க்கை உசந்த எடத்துல
கடுதாசி பாக்கையில
கண நேர சந்தோஷம்
உடனே ஊர் கழனி ஞாபகம்
என் செய்ய என் குடி உயர
இதோ கடல் கடந்து
கரண்டு பக்காத கிரமத்தான்
இன்டெர்னெட்டில் காதல் கதை
இழுக்கிறதே ஊர் ஞாபகம்
பனங்காய் வண்டி ஓட்ட ஆள் இல்லையாம்
பத்திரிகையில் வரி விளம்பரம்!