...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Wednesday, January 25, 2006

வாழ்க்கை பயணம்...........

மூன்று புறமும் நீலக்கடல் சூழ்ந்து ஒரு புறம் உப்பு நீர் ஓடும் ஆற்றினால் சூழப்பட்ட ஓர் அழகான கிராமம்.வெளி உலகோடு இணைப்பதற்கு (சில நூறு மீட்டர் தூரம்தான்) இரு அகன்ற காங்கரீட் பாலங்கள். பதினைந்து அடி பள்ளம் தோன்டினாலே பைசா செலவில்லமல் சுவையான குடிநீர். ஆண்டு முழுவதும் வீட்டை சுற்றி ஏதேனும் சாகுபடி நடந்து கொண்டு இருக்கும்.சுகமான ,சுத்தமான சத்தான தென்றல் காற்று வருடும் இந்த சூழலில் வளர்ந்து வாழ்ந்து வரும் இளம் பொறியாளர் சந்தீப்.தந்தையை இழந்ததால் குடும்ப தலைமை பொருப்பு தன் மேல்.விதவையான அம்மா ,இவர்களோடு வசித்து வரும் நான்கைந்து வேலையாட்கள்.வீட்டு வேலைக்கும் வீட்டை சுற்றியுள்ள விளைநிலங்களில் வேலை செய்யும் இவர்களோடு நகர்கிறது வாழ்க்கை. கடலை,பருத்தி,மல்லிகை,கனகாம்பரம் தோட்டங்கள் என விவசாய வாழ்வோடு வளமாய் இருக்கும் இவன் தானே முதலாளி,தானே தொழிலாளி.யாருக்கும் கை கட்டி பதில் சொல்லி பரபரப்பான
அமைதியில்லாத சம்பவங்கள் இங்கே இல்லை.

ஊருக்குள்ளே ஆயிரம் உறவுகளில் தினம் ஒரு வீட்டில் ஏதெனும் ஓர் விசேஷம்.ஊர் கூடி உறவுகளோடு உல்லாசமான வாழ்க்கை. நள்ளிரவு 2 மணிக்கு "ஐயோ "என சிறு சப்தம் கேட்டாலும் பரபரப்பாக அனைவரும் வந்து நிற்கும் பாச பிணைப்பான வசந்த கிராமம்.

இந்த சூழ்நிலையில் சந்தீபிற்கு பக்கத்து கிராமத்தில் வசிக்கும் தாய் மாமன், வேலை நிமித்தமாக சென்னைக்கு புலம் பெயர்ந்து அங்கேயே குடும்பத்தோடு தங்கி விட்டனர்.
மாமாவும் மாமியும் அரசாங்க உயர்பதவியில் உள்ளனர். இவர்களுக்கு அழகான இரு நங்கைகள்.பொறியியல் படிக்கும் சின்னவளும், முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கும் பெரியவளும் விடுமுறை காலங்களில் சந்தீபின் வீட்டில் விடுமுறையை கழிப்பர்.
சந்தீபிற்கு சின்ன தலைவலி என்றாலும் கூட சென்னையிலிருந்து ஊர் வர துடிக்கும் மாமா! மாமியும் அது போலவே!


தன் இரு பெண்களுக்கும் சென்னையிலேயே இரு சொகுசு மாளிகையை மாமா எப்பொழுதோ கட்டி வைத்து விட்டார்.பெரிய பெண்ணை தன் மருமகனுக்கு கொடுக்கலாம் என்ற பரவலான எண்ணம் மாமா ,மாமிக்கு உண்டு. ஊரிலும் உறவுகள் அதையே பேசிக்கொள்ளும்.கல்லூரி படிக்கும் காலங்களில் மாமா பெண் மீது ஓர் ஈர்ப்பு இருந்தது உண்மையே. மாமா பெண்ணின் நுனி நாக்கு ஆங்கிலமும்,நகர்புறத்து நவீன நாகரீகமும்,நடை உடை பாவனையும் சந்தீபை மிரள வைத்து விட்டதே.

கிராமத்தில் கலெக்டர் வேலை பார்க்கும் பெண்ணாக இருந்தாலும் தோட்டத்து கிணற்றில் தண்ணீர் எடுத்து இடுப்பில் சுமந்து வருவது சாதாரண நிகழ்வு. சாப்பிட்ட தட்டையே கழுவாத இந்த நங்கையை கிராம புற பழக்க வழக்கத்தோடு சீர் தூக்கி பார்த்த சந்தீப் தன் எண்ணங்களுக்கும் ஆசைகளுக்கும் எப்போதோ அணை போட்டு விட்டான். விலக விலக தானே நெருக்கம் அதிகமாகும். மாமன் மகள் இவன் மீது கொள்ளை பிரியம் வைத்து இருந்தாள்.


சென்னையில் பணி செய்த காலங்களில் தனியே வீடு பிடித்து சந்தீப் தங்கியிருந்தான். நேரம் கிடைத்த போதெல்லாம் மாமா வீட்டுக்கு செல்வது வழக்கம். ஓர் அந்தி மாலையில் நண்பர்களுடன் மெரினாவில் பொழுதை கழிக்க சென்ற சந்தீப்,தன் மாமன் மகள் அங்கே ஓர் ஆண் நண்பருடன் இருப்பதை கண்டு அதன் பின் அவளுடன் பேசுவதை விட்டு விட்டான். மாமா வீட்டுக்கும் செல்வதில்லை.ஒவ்வொரு ஞாயிறும் மாமா வீட்டுக்கு செல்லும் சந்தீப் இந்த வாரம் செல்லவில்லை. திங்கள் கிழமை கல்லுரியிலிருந்து நேரே சந்தீப் வீட்டிற்கு சென்றாள்.அவளோடு பேச விருப்பமில்லை என்று கதவடைத்து விட்டான் சந்தீப்.சில மணிநேரம் வெளியே நின்று பின் சின்ன அழுகையோடு வீடு திரும்பி விட்டாள். மருமகன் நேற்று வீட்டுக்கு வரவில்லையே என்னமோ ஏதோ என்று அலுவலகத்திலிருந்து சந்தீபின் வீடு வந்து தன்னுடன் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார். அதன் பின் மாமன் மகள் பல முறை அழுதும் சந்தீப் முகம் கொடுத்து பேசு வதில்லை.ஏதோ சின்ன ஊடல் என்று மாமாவும் மாமியும் இதை பற்றி கண்டு கொள்ளவில்லை.


மாமாவிற்கு தொலை பேசும் போது மறுமுனையில் அவள் எடுத்தால் மௌனமே பதிலாக சில நிமிடங்கள் .நிமிடங்கள் கழிந்து மாமாவுக்கோ மாமிக்கோ கண்சாடையிலேயே ரிசீவர் கை மாறும்.இவ்வாறு வளர்ந்து வந்த இவர்களது ஊடல் தொடர்ந்து கொண்டுதானிருந்தது. விடுமுறையில் ஊருக்கு வரும் போது ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வார்களே ஒழிய வாய் பேச்சுக்கு அங்கே வேலையில்லை.


சந்தீபிற்கு கல்யாண நேரமும் வந்து விட்டது.


கிராமத்து சூழலில்தான் பெண் வேன்டும்.அதுவும் கிராமத்தில்தான் தங்க வேண்டும்,தனிக்கட்டையான அம்மாவும் அதையேதான் விரும்புகிறாள்.வயதான காலத்தில் வயிற்றில் சுமந்த மகனோடு இருக்கத்தானே எந்த தாயும் விரும்புவாள்.ஆனால் அந்த பெண்ணிற்கோ நேர் மாறான எண்ணங்கள். நகரத்து நண்பர்கள், நவீன வாழ்க்கை சுகம்,விடுமுறையில் மட்டும் கிராமம் பிடிக்கிறது.

இப்போது இருவர் உள் மனதிலும் காதல் நிரம்பி வழிகிறது.


இருந்தும்


பரபரப்பான நகர சூழல் வேண்டாம். தென்றல் காற்றோடு தென்னை மர நிழலில் பழைய சோற்றில் கலந்த பசுமாட்டு தயிர்தான் சொர்க்கம்

இது சந்தீப்


எல்லா விஷயங்களும் இணையத்திலேயே முடித்து ,இல்லத்திற்கே எல்லா பொருளும் வந்து சேரும் இனிய வாழ்க்கை நகரத்தில்தான் சாத்தியம். இதுதான் சொர்க்கம்


இது மாமன் மகள்.


இருவரும் சேர்ந்து வாழ எந்த வாழ்க்கை பயணத்தை தேர்ந்தெடுப்பது.?

காலம் சீக்கிரம் பதில் சொல்லிவிடும்.


தை பிறந்து விட்டதே!

Receomand this post to other reades :

Friday, January 13, 2006

பொங்கலோ பொங்கல்!






ஆடி மாதம் காவிரியில் தண்ணீர் வந்தால் ஆடி அசைந்து கடை மடை பகுதி நம்ம வயலுக்கு வந்து சேர ஆரேழு நாட்களாகும். ஆற்றிலே தண்ணீர் வந்தால் எல்லோருக்கும் சந்தோஷம்தான் (எனக்கு மட்டும்.... விளையாட போகின்ற நேரத்தில் வீட்டு வேலைகள் எல்லாம் நம்ம தலையில் ஏற்றினால்?)
அதுவரையில் மச மசன்னு இருந்த மக்கள் ஆற்றில் தண்ணீர் வந்தவுடன் வயல் வேலைகளில் இறங்கி விடுவர்.கோடை உழவு செய்து கிளறி விடப்பட்ட பூமி பாளம் பாய்ந்து வரும் தண்ணீரோடு சேர்ந்து பதப்படும்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் டிராக்டர் விட்டு ,டிராக்டர் கிடைக்காவிடில் உழவு மாடு பிடித்து நன்றாக சேறடித்து விடுவார்கள். நாற்றங்காலில் நாற்று ரெடியாக இருக்கும் . ஆனால் நாற்று பறிக்க ஆள் கிடைக்காது.ஆள் ஒன்றுக்கு சம்பளம் ஐம்பது ரூபாயாக இருந்தது நூரு ரூபாய் கொடுத்தாலும் சம்பள ஆள் கிடைக்காது.
காலத்தில் நாற்றங்காலில் நாற்று பறிக்க வில்லை எனில் நாற்றுக்கள் கணு ஏறி போகும் .ஆள் கிடைக்கவில்லையே என்ன செய்ய?வீட்டு மக்கள் எல்லாரும் சேர்ந்து காலை , மாலை , சாயங்காலம் நிலா வெளிச்சம்னு எப்படியோ நாற்று பறிக்கிற வேலை முடிந்துவிடும். நாற்று எல்லாத்தையும் சின்ன சின்ன கட்டுகளாக கட்டி வண்டி புடிச்சி வயலுக்கு போய் சேர்ந்துவிடும்.வயல்வெளியில் இறக்கி வைத்த நாற்றுக்கள் பக்கத்து வயலில் நாற்று நடுறவங்களை வேடிக்கை பார்த்துட்டு சோர்ந்து போய் நிற்கும்.அலைந்து திரிந்து எப்படியோ வயசு பொண்ணுங்களையும் வயசான அம்மாக்களையும் நாற்று நட கொண்டு வந்துடுவாங்க. அப்பதான் நமக்கு பிஸியான நேரம்.கட்டு கட்டா உள்ள நாற்றையெல்லாம் நாலா பக்கமும் பரப்பி வைக்கனும்.அப்பாடா! கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைத்து ஓரமா ஒதுங்குனா அதுக்குள்ள காப்பி குடிக்கிற நேரம் வந்துடும்.
."என்ன தம்பி வரிக்கி ரொட்டி வங்கிட்டு வந்தியளா"அதிகார குரல் வந்து சேரும்.இதெல்லாம் தெரிந்து முன்னமே சர்க்கரை, பால்,பிஸ்கெட் எல்லாம் வயலுக்கு வந்துடும்.வயல் வெளியில் ஏது விறகு? அதையும் கையோடு போகனும். வயல் வரப்புல "ப" வடிவத்துல வெட்டி எடுத்துட்டு அதையே அடுப்பா பாவித்து காப்பி சமாச்சாரம் முடிந்துவிடும்.ஒரு வழியா வெற்றிலை பாக்கு அரட்டை கச்சேரியோடு நாற்று நடவு முடிந்துவிடும். வேலை முடிந்து பாத்திரம் பண்டமெல்லாம் அள்ளிகிட்டு வந்து வீடு வந்து சேர்ந்தா அதோடு விட்டுச்சா வேலை! மேட்டு பாங்கான வயலுக்கெல்லாம் நேராக தண்ணீர் போய் சேராது.எஞ்சின் வைத்துதான் நீர் பாய்ச்சனும். அந்த சமயத்துல டீசல் ஒன்றுக்கு மூன்று மடங்கா விற்கும்

அடிக்கின்ற வெயிலில் சோர்ந்து தலை சாய்ந்து நிற்கும் நாற்றுக்கள் நான்கு நாட்களில் சேற்றில் வேர் பிடித்து தலை தூக்கி சிரித்து கொண்டு இருக்கும்.அப்பொழுதான் மனதிற்கு கொஞ்சம் நிம்மதி விடிய விடிய எஞ்சின் வைத்து மேட்டு நிலங்களுக்கு தண்ணீர் இறைத்து விட்டு காலையில் சென்று பார்த்தால் ஒரு பொட்டு தண்ணீர் கூட இருக்காது. இந்த வயல் எலிகள் வரப்போரம் வீடு கட்டி விளையாடுமா,அவங்க வீடு கொல்ல பக்கவாசல் ,பள்ளமான பகுதியில இருக்கும். அது வழியே நாம தேக்கி வைத்த தண்னீரெல்லாம் ஓட்டம் பிடித்துவிடும்.மண்வெட்டி எடுத்து அவங்க வீடை துவம்சம் பண்ணிவிட்டு மறுபடியும் தண்ணீர் தேக்கி மறுநாள் சென்று வயலை பார்த்தால் அப்பொழுதும் மனசுக்கு கொஞ்சம் சங்கடமா இருக்கும். சின்னஞ்சிறிய அந்த நாற்றுக்கள் கொஞ்சம் வெளுத்து காணப்படும் . தினம் பொழுது விடிஞ்சா பால்,ஹார்லிக்ஸ்ன்னு நாம வயிற்றை நிரப்பி கொள்கிறோமே, சின்னஞ்சிறுசுகள் அதுக என்ன செய்யும், உரமண்டியில யூரியா (ரசாயன உரம்) வாங்கி வந்து ஒரு சாண் உயரத்திர்கு தண்ணீர் தேக்கி யூரியாவை அள்ளி வீசிவிட்டு மறுநாள் வயலுக்கு சென்று பார்த்தோமானால் ,இது நம்ம வயல்தானான்னு சந்தேகம் வந்துடும்.பச்சை பசேலென்று பயிர் சிரித்து கொண்டு இருக்கும்.

அந்த சந்தோஷமும் கொஞ்ச நாளைக்குத்தான்,

"நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொழியுமாம்........"

நெற்பயிருக்கு அள்ளி அள்ளி வீசுன உரத்தில புற்கள் நல்லா சாப்பிட்டுவிட்டு ,நெற்பயிரை காலால் மிதித்துவிட்டு நாந்தான் சாம்பியன்னு சொல்லிகிட்டு சட சடன்னு வளர்ந்தி நிப்பாங்க!
மறுபடியும் ஆள் புடிக்கனும் இந்த வளர்ந்து நிற்கிற களைசெடிகளை பிடுங்கி எறிய.தினம் ஒரு வண்டி புல் சேர்ந்துடும்

அதை அப்படியே கொன்டு வந்து தொழுவத்துல இருக்கிற மாட்டுக்கு குடுத்தோமானால் சும்மா குடம் குடமா பால் கறக்கும்.
களை எல்லாம் எடுத்தாச்சி,இப்போ ஒரு செடி பத்து பதினைந்து செடியா பத்தை கட்ட ஆரம்பிக்கும். அந்த நேரத்தில்தான் பசுமையா இருக்கிற செடிகளை வண்டுகளும் பூச்சிகளும் அவங்களால முடிஞ்ச அளவுக்கு பதம் பார்ப்பாங்க.உரமண்டிக்கு சென்று பூச்சி மருந்து வாங்கி கைத்தெளிப்பான் வைத்து நாமே மருந்தடிக்கலாம்னா நமக்கு அந்த வாடையே ஒத்து வராது..இதற்கென்று ஆளுங்க இருக்காங்க, காடுமேடெல்லாம் அலைந்து வரும் அவர்களை இரவு நேரங்களில் வீடுகளில் பார்த்து அப்பாயிண்ட்மென்ட் வாங்கி கொள்ளலாம்.

மருந்தெல்லாம் அடித்து முடிந்தது, இப்பொழுது நெற்பயிர் கற்பமாக இருக்கும்.ஒரு நெல் நாற்றை பிடுங்கி அதன் வயிற்றில் இருக்கும் இளம் நெல்லினை (இதில் இப்பொழுது அரிசி திட நிலையில் இல்லாமல் வெண்மையாக பால் நிறத்தில் இருக்கும்) பறித்து சுவைத்தால் அப்பப்பா அதன் சுவையே பிரமாதமா இருக்கும்.

நெல் நன்றாக முற்றும் வரை கொஞ்சம் தண்ணீர் வயல்களில் இருந்து கொன்டே இருக்கனும்,அறுபது நாட்களிலிருந்து நான்கு மாதங்கள் வாழ்நாள் உள்ள வித விதமான நெல் வகைகள் உள்ளன.நெல்மணிகள் நன்றாக முற்றியதும் எடை தாங்காமல் பூமித்தாயிக்கு நன்றி செய்யும் விதமாக தலைதாழ்ந்து நிற்கும்.

அறுவடைக்கு ஆள் தேடினால் சம்பளத்திற்கு யாரும் வரமாட்டார்கள்"விழுந்த கூலி தருவீங்களா?, எத்தனை பங்கு தருவீங்க? விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு கொடுப்பது இது எங்கும் சாதரனமான சம்பளம். மும்முறமாக கதிரடிக்கும் வேலை நடந்து கொன்டு இருக்கும். "தம்பி நாளைக்குத்தான் கடைசி வேலை பெரியாச்சி அம்மனுக்கு கள்ளு படைக்கனும் மறக்காம ஒரு பதினைந்து லிட்டர் வாங்கி வந்துடுங்க" இவர்கள் சமாச்சாரம் தெரிந்தே முன்னமே ஊரில் சொல்லி வைத்திருப்போம்.பனங்கள்ளும் கைக்கு வந்துடும், வயலுக்கு கொண்டு செல்வது எப்படி?
வழியில மாமன், மச்சான் ,ஒன்றுவிட்ட சித்தப்பா இவங்க கண்ண கட்டிவிட்டு வயல் போய் சேர்ந்து விசேஷம் முடிச்சி கூலி போக நெல் மூட்டை வீடு வந்து சேரும் போது தான் அந்த வருடம் பட்ட கஷ்டமெல்லாம் காத்தா பறந்துடும். இதற்கிடையில் பொங்கல் சமாச்சாரம் களை கட்ட ஆரம்பிச்சிடும்.

பொங்கலோ பொங்கல்!

Receomand this post to other reades :