...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Friday, January 13, 2006

பொங்கலோ பொங்கல்!






ஆடி மாதம் காவிரியில் தண்ணீர் வந்தால் ஆடி அசைந்து கடை மடை பகுதி நம்ம வயலுக்கு வந்து சேர ஆரேழு நாட்களாகும். ஆற்றிலே தண்ணீர் வந்தால் எல்லோருக்கும் சந்தோஷம்தான் (எனக்கு மட்டும்.... விளையாட போகின்ற நேரத்தில் வீட்டு வேலைகள் எல்லாம் நம்ம தலையில் ஏற்றினால்?)
அதுவரையில் மச மசன்னு இருந்த மக்கள் ஆற்றில் தண்ணீர் வந்தவுடன் வயல் வேலைகளில் இறங்கி விடுவர்.கோடை உழவு செய்து கிளறி விடப்பட்ட பூமி பாளம் பாய்ந்து வரும் தண்ணீரோடு சேர்ந்து பதப்படும்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் டிராக்டர் விட்டு ,டிராக்டர் கிடைக்காவிடில் உழவு மாடு பிடித்து நன்றாக சேறடித்து விடுவார்கள். நாற்றங்காலில் நாற்று ரெடியாக இருக்கும் . ஆனால் நாற்று பறிக்க ஆள் கிடைக்காது.ஆள் ஒன்றுக்கு சம்பளம் ஐம்பது ரூபாயாக இருந்தது நூரு ரூபாய் கொடுத்தாலும் சம்பள ஆள் கிடைக்காது.
காலத்தில் நாற்றங்காலில் நாற்று பறிக்க வில்லை எனில் நாற்றுக்கள் கணு ஏறி போகும் .ஆள் கிடைக்கவில்லையே என்ன செய்ய?வீட்டு மக்கள் எல்லாரும் சேர்ந்து காலை , மாலை , சாயங்காலம் நிலா வெளிச்சம்னு எப்படியோ நாற்று பறிக்கிற வேலை முடிந்துவிடும். நாற்று எல்லாத்தையும் சின்ன சின்ன கட்டுகளாக கட்டி வண்டி புடிச்சி வயலுக்கு போய் சேர்ந்துவிடும்.வயல்வெளியில் இறக்கி வைத்த நாற்றுக்கள் பக்கத்து வயலில் நாற்று நடுறவங்களை வேடிக்கை பார்த்துட்டு சோர்ந்து போய் நிற்கும்.அலைந்து திரிந்து எப்படியோ வயசு பொண்ணுங்களையும் வயசான அம்மாக்களையும் நாற்று நட கொண்டு வந்துடுவாங்க. அப்பதான் நமக்கு பிஸியான நேரம்.கட்டு கட்டா உள்ள நாற்றையெல்லாம் நாலா பக்கமும் பரப்பி வைக்கனும்.அப்பாடா! கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைத்து ஓரமா ஒதுங்குனா அதுக்குள்ள காப்பி குடிக்கிற நேரம் வந்துடும்.
."என்ன தம்பி வரிக்கி ரொட்டி வங்கிட்டு வந்தியளா"அதிகார குரல் வந்து சேரும்.இதெல்லாம் தெரிந்து முன்னமே சர்க்கரை, பால்,பிஸ்கெட் எல்லாம் வயலுக்கு வந்துடும்.வயல் வெளியில் ஏது விறகு? அதையும் கையோடு போகனும். வயல் வரப்புல "ப" வடிவத்துல வெட்டி எடுத்துட்டு அதையே அடுப்பா பாவித்து காப்பி சமாச்சாரம் முடிந்துவிடும்.ஒரு வழியா வெற்றிலை பாக்கு அரட்டை கச்சேரியோடு நாற்று நடவு முடிந்துவிடும். வேலை முடிந்து பாத்திரம் பண்டமெல்லாம் அள்ளிகிட்டு வந்து வீடு வந்து சேர்ந்தா அதோடு விட்டுச்சா வேலை! மேட்டு பாங்கான வயலுக்கெல்லாம் நேராக தண்ணீர் போய் சேராது.எஞ்சின் வைத்துதான் நீர் பாய்ச்சனும். அந்த சமயத்துல டீசல் ஒன்றுக்கு மூன்று மடங்கா விற்கும்

அடிக்கின்ற வெயிலில் சோர்ந்து தலை சாய்ந்து நிற்கும் நாற்றுக்கள் நான்கு நாட்களில் சேற்றில் வேர் பிடித்து தலை தூக்கி சிரித்து கொண்டு இருக்கும்.அப்பொழுதான் மனதிற்கு கொஞ்சம் நிம்மதி விடிய விடிய எஞ்சின் வைத்து மேட்டு நிலங்களுக்கு தண்ணீர் இறைத்து விட்டு காலையில் சென்று பார்த்தால் ஒரு பொட்டு தண்ணீர் கூட இருக்காது. இந்த வயல் எலிகள் வரப்போரம் வீடு கட்டி விளையாடுமா,அவங்க வீடு கொல்ல பக்கவாசல் ,பள்ளமான பகுதியில இருக்கும். அது வழியே நாம தேக்கி வைத்த தண்னீரெல்லாம் ஓட்டம் பிடித்துவிடும்.மண்வெட்டி எடுத்து அவங்க வீடை துவம்சம் பண்ணிவிட்டு மறுபடியும் தண்ணீர் தேக்கி மறுநாள் சென்று வயலை பார்த்தால் அப்பொழுதும் மனசுக்கு கொஞ்சம் சங்கடமா இருக்கும். சின்னஞ்சிறிய அந்த நாற்றுக்கள் கொஞ்சம் வெளுத்து காணப்படும் . தினம் பொழுது விடிஞ்சா பால்,ஹார்லிக்ஸ்ன்னு நாம வயிற்றை நிரப்பி கொள்கிறோமே, சின்னஞ்சிறுசுகள் அதுக என்ன செய்யும், உரமண்டியில யூரியா (ரசாயன உரம்) வாங்கி வந்து ஒரு சாண் உயரத்திர்கு தண்ணீர் தேக்கி யூரியாவை அள்ளி வீசிவிட்டு மறுநாள் வயலுக்கு சென்று பார்த்தோமானால் ,இது நம்ம வயல்தானான்னு சந்தேகம் வந்துடும்.பச்சை பசேலென்று பயிர் சிரித்து கொண்டு இருக்கும்.

அந்த சந்தோஷமும் கொஞ்ச நாளைக்குத்தான்,

"நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொழியுமாம்........"

நெற்பயிருக்கு அள்ளி அள்ளி வீசுன உரத்தில புற்கள் நல்லா சாப்பிட்டுவிட்டு ,நெற்பயிரை காலால் மிதித்துவிட்டு நாந்தான் சாம்பியன்னு சொல்லிகிட்டு சட சடன்னு வளர்ந்தி நிப்பாங்க!
மறுபடியும் ஆள் புடிக்கனும் இந்த வளர்ந்து நிற்கிற களைசெடிகளை பிடுங்கி எறிய.தினம் ஒரு வண்டி புல் சேர்ந்துடும்

அதை அப்படியே கொன்டு வந்து தொழுவத்துல இருக்கிற மாட்டுக்கு குடுத்தோமானால் சும்மா குடம் குடமா பால் கறக்கும்.
களை எல்லாம் எடுத்தாச்சி,இப்போ ஒரு செடி பத்து பதினைந்து செடியா பத்தை கட்ட ஆரம்பிக்கும். அந்த நேரத்தில்தான் பசுமையா இருக்கிற செடிகளை வண்டுகளும் பூச்சிகளும் அவங்களால முடிஞ்ச அளவுக்கு பதம் பார்ப்பாங்க.உரமண்டிக்கு சென்று பூச்சி மருந்து வாங்கி கைத்தெளிப்பான் வைத்து நாமே மருந்தடிக்கலாம்னா நமக்கு அந்த வாடையே ஒத்து வராது..இதற்கென்று ஆளுங்க இருக்காங்க, காடுமேடெல்லாம் அலைந்து வரும் அவர்களை இரவு நேரங்களில் வீடுகளில் பார்த்து அப்பாயிண்ட்மென்ட் வாங்கி கொள்ளலாம்.

மருந்தெல்லாம் அடித்து முடிந்தது, இப்பொழுது நெற்பயிர் கற்பமாக இருக்கும்.ஒரு நெல் நாற்றை பிடுங்கி அதன் வயிற்றில் இருக்கும் இளம் நெல்லினை (இதில் இப்பொழுது அரிசி திட நிலையில் இல்லாமல் வெண்மையாக பால் நிறத்தில் இருக்கும்) பறித்து சுவைத்தால் அப்பப்பா அதன் சுவையே பிரமாதமா இருக்கும்.

நெல் நன்றாக முற்றும் வரை கொஞ்சம் தண்ணீர் வயல்களில் இருந்து கொன்டே இருக்கனும்,அறுபது நாட்களிலிருந்து நான்கு மாதங்கள் வாழ்நாள் உள்ள வித விதமான நெல் வகைகள் உள்ளன.நெல்மணிகள் நன்றாக முற்றியதும் எடை தாங்காமல் பூமித்தாயிக்கு நன்றி செய்யும் விதமாக தலைதாழ்ந்து நிற்கும்.

அறுவடைக்கு ஆள் தேடினால் சம்பளத்திற்கு யாரும் வரமாட்டார்கள்"விழுந்த கூலி தருவீங்களா?, எத்தனை பங்கு தருவீங்க? விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு கொடுப்பது இது எங்கும் சாதரனமான சம்பளம். மும்முறமாக கதிரடிக்கும் வேலை நடந்து கொன்டு இருக்கும். "தம்பி நாளைக்குத்தான் கடைசி வேலை பெரியாச்சி அம்மனுக்கு கள்ளு படைக்கனும் மறக்காம ஒரு பதினைந்து லிட்டர் வாங்கி வந்துடுங்க" இவர்கள் சமாச்சாரம் தெரிந்தே முன்னமே ஊரில் சொல்லி வைத்திருப்போம்.பனங்கள்ளும் கைக்கு வந்துடும், வயலுக்கு கொண்டு செல்வது எப்படி?
வழியில மாமன், மச்சான் ,ஒன்றுவிட்ட சித்தப்பா இவங்க கண்ண கட்டிவிட்டு வயல் போய் சேர்ந்து விசேஷம் முடிச்சி கூலி போக நெல் மூட்டை வீடு வந்து சேரும் போது தான் அந்த வருடம் பட்ட கஷ்டமெல்லாம் காத்தா பறந்துடும். இதற்கிடையில் பொங்கல் சமாச்சாரம் களை கட்ட ஆரம்பிச்சிடும்.

பொங்கலோ பொங்கல்!

Receomand this post to other reades :

24 Comments:

At 10:25 PM, Blogger ஞானவெட்டியான் said...

இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.

 
At 10:39 PM, Blogger பொன்னம்பலம் said...

அண்ணே! ஒங்களுக்கும் பொங்கல் வாழ்த்து.
ஒங்க குடும்பத்துக்கும் பொங்கல் வாழ்த்து.

 
At 10:52 PM, Blogger ஞானவெட்டியான் said...

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

 
At 11:04 PM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் ஞான வெட்டியான் ! பொங்கல் வாழ்துக்கள்!

 
At 11:07 PM, Blogger சிங். செயகுமார். said...

அண்ணே பொன்னம்பலம்! உங்களுக்கும் இல்லத்தாருக்கும் உழவர் தின வாழ்த்துக்கள்!

 
At 11:08 PM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் தங்கவேல் ,முதல் முறையா நம்ம வீட்டுக்கு வந்து இருக்கீக.பொங்கல் வாழ்துக்கள்!

 
At 9:42 AM, Blogger சிவா said...

தம்பி சிங்கு! பொங்கல் எப்படிப்பா போகுது?. அண்ணனோட பொங்கல் வாழ்த்துக்கள். பதிவ அப்புறம் படிச்சி சொல்லறேன்.

 
At 11:52 AM, Blogger ஜோ/Joe said...

சிங்.செயக்குமார்,
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

 
At 12:05 PM, Blogger மணியன் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

 
At 12:28 PM, Blogger G.Ragavan said...

பொங்கல் வாழ்த்தைக் கூட பொங்கல் திருநாள் வருவதற்கு முன்னுள்ள உழைப்பு அத்தனையும் எழுத்தில் காட்டியிருக்கின்றீர்கள். உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள்.

 
At 5:06 PM, Blogger சிங். செயகுமார். said...

சிவா பொங்கல் நல்லா போயிட்டு இருக்கு.
உங்களுக்கும் வீட்ல ஊள்ள அனைவருக்கும் பொங்கல் வாழ்துக்கள்

 
At 5:06 PM, Blogger சிங். செயகுமார். said...

நன்றி ஜோ! உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

 
At 5:06 PM, Blogger சிங். செயகுமார். said...

வாங்க மணியன் வணக்கம் வாழ்துக்கள்!

 
At 5:07 PM, Blogger சிங். செயகுமார். said...

ராகவன் சார் வணக்கம்! பெங்களூரு ல எப்படி பொங்கல் போயிட்டு இருக்கு, பொங்கல் வாழ்த்துக்கள்!

 
At 4:48 AM, Blogger சிவா said...

சிங்கு! சின்ன வயசுல நல்லா என்ஞாய் பண்ணிருக்கீங்க. இப்போ ஊருல்லாம் எப்படி இருக்கு. அப்படியே இருக்குதா. நமக்கு இந்த அளவுக்கு கொடுத்து வைக்கலையே.

 
At 4:07 PM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் சிவா ,வீட்ல இப்போ அம்மாவும் அப்பாவும்தான் இருக்காங்க.நெல் சாகுபடியெல்லாம் விட்டாச்சு. தெரிஞ்சவங்க சாகுபடி பண்ணி தருகிறார்களாம் . இனி அந்த காலம் திரும்புவது சாத்தியமா என்பது தெரியவில்லை!

 
At 4:56 PM, Blogger ENNAR said...

ஜெயகுமார் எப்பொழுது வயல் அறுவடை ஆள்தேவையா?
வயல்கள் நன்றாக உள்ளனவா? அல்லது வெள்ள நிவாரணம் பெற இருக்கிறீர்கள்? விவசாயிதான?

 
At 9:41 AM, Blogger சிங். செயகுமார். said...

அறுவடை முடிஞ்சி பொங்கலும் கொண்டாடியாச்சு.நீங்க ரொம்ப லேட். அடுத்தவருஷம் கட்டாயம் அழைக்கிறேன். வலை பக்கம் வருகைக்கு நன்றி நண்பரே!

 
At 5:40 PM, Blogger குமரன் (Kumaran) said...

சிங். மொதல்ல மன்னிப்பு கேட்டுக்கறேன். இப்பத் தான் உங்க பொங்கல் பதிவைப் படிக்க முடிஞ்சது. ரெண்டு நாளுக்கு முன்னாடி பிரிண்ட் அவுட் எடுத்து வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போனேன். நேத்து தான் படிச்சு முடிச்சேன்.

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. கிராமம்ன்னா பஸ்ல போறப்பயும் ட்ரெயின்ல போறப்பயும் பாத்த என்னைப் போன்றவங்களுக்கு ஒரு மிக நல்ல அறிமுகம். எளிமையான ஆனா மனசுல நல்லாப் பதியுற மாதிரி எழுதியிருக்கீங்க. உங்களுக்கு, இந்தப் பதிவுக்கு இந்தப் பின்னூட்டம் மட்டும் போதாது. வேறு ஏதாவது செய்யணும். என்னன்னு யோசிச்சு செய்யறேன்.

தொடர்ந்து நிறைய எழுதுங்கள் சிங்காரகுமரன்.

 
At 9:56 PM, Blogger சிங். செயகுமார். said...

இந்த பதிவையாவது புரிந்து கொண்ட குமரனுக்கு நன்றிகள்!பொங்கல் திருநாளுக்கு முன் நிகழ்வுகளை சொல்லி பொங்கல் திருநாள் விஷேசங்களை சொல்ல நினைத்து அதற்குள் பொங்கலும் முடிந்து விட்டது.

 
At 4:18 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

கலக்கல் பதிவு!

எங்க வீட்டில் ஒரு தடவை இந்த அனுபவம் கிடைப்பதற்காக நெல்லு விதைத்தார்கள்.

நன்றி சிங். செயகுமார்.

-மதி

 
At 5:21 AM, Blogger சிங். செயகுமார். said...

மதி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்!

 
At 10:55 PM, Blogger மதுமிதா said...

நன்றி சிங்.செயகுமார்
தாமதமான வாழ்த்தும்,நன்றியும்
பொங்கல் பதிவு நல்லாயிருக்கு
என்னவேன்னா சொல்லுங்க வயலும்,விவசாயமும் அது கொடுத்த இயற்கை இயல்பும்
ம்ம்ம் புது ஜெனரேசனுக்கு புரியாதுங்க

 
At 4:59 AM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் மதுமிதா அக்கா! உங்கள் வாழ்த்தும் வருகையும் எனக்கு சந்தோஷம் .இருந்தும் எனக்குள் ஒரு பெரிய கவலை .இனி அந்த வாழ்க்கை திரும்புமா என்று!

 

Post a Comment

<< Home